தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்திநகரைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரது மகன் வெள்ளத்துரை (50), இவர் கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா நுழைவு வாயிலில் மீன்கடை நடத்தி வந்துள்ளார். வழக்கமாக இரவில் மீன் கடையில் வெள்ளத்துரை தூங்குவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வழக்கம் போல வெள்ளத்துரை கடையில் தூங்கியதாக தெரிகிறது. இவருடன் மேலப்பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்த சாமி என்பவரும் தூங்கி உள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் சில மர்ம நபர்கள் வெள்ளத்துரை மற்றும் அவருடன் இருந்த சாமியையும் வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சாமி உயிர் தப்பிக்க கடையில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே கீழே விழுந்து உயிரிழந்தார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெள்ளத்துரை யின் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அழைத்து வரும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து இரு உடல்களும் உடற்கூறாய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டது . இதுகுறித்து தகவல் கிடைத்ததும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிறிது தூரம் வரை மோப்ப நாய் ஓடியது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் வியாபாரி உள்பட இரண்டு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.


