நன்னிலம் அருகே கோவில் நில ஆக்கிரமிப்பை தட்டிக் கேட்ட இருவர் மீது அரிவாள் வெட்டு!பல மாதங்களாக நீடித்த புகார்கள்… அதிகாரிகள் ஆய்வுக்கு மறுநாளே தாக்குதல், ஒருவர் கைது!ஒரு கோவில் என்பது பக்தியும், அமைதியும், ஒற்றுமையும் நிலைக்கும் புனித இடமாக இருக்க வேண்டும். ஆனால், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கூத்தனூரில், பல மாதங்களாக நீடித்து வந்த கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான புகார், இறுதியில் ரத்தம் சிந்திய வன்முறைச் சம்பவமாக மாறியுள்ளது. கோவில் நிலம், பொதுப்பாதை மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்த பகுதி மக்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், குடவாசல் ஒன்றியம், பூந்தோட்டம் 34 கூத்தனூர் ஊராட்சி கீழத்தெருவில் சுமார் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. தலைமுறைகளாக பொதுமக்களின் வழிபாட்டுத் தலமாக இருந்து வரும் இந்தக் கோவிலைச் சுற்றி, கடந்த சில ஆண்டுகளாக நில ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்தன.கிராம மக்கள் கூறுவதன்படி, கோவிலின் பூசாரியாக இருந்து வந்த முரளி என்பவர் கோவில் வளாகத்தைச் சுற்றி உயரமான மதில்சுவர் எழுப்பியதுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்திருந்த மின்பகிர்மானியையும் (டிரான்ஸ்பார்மர்) அந்த மதில்சுவருக்குள் அடைத்து, இரும்புக் கேட் அமைத்து பூட்டி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பிடாரியம்மன் மற்றும் செல்லியம்மன் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களையும் தன்வசப்படுத்தி பயன்படுத்தி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்த ஆக்கிரமிப்பால் பல ஆண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதை மறைக்கப்பட்டதாகவும், விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளதுடன், கோவில் வளாகத்தில் இருந்து கிடைக்கும் குடிநீரைப் பயன்படுத்துவதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்பகிர்மானி பொதுமக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் முக்கியமான உள்கட்டமைப்பாகும். மின்தடை அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், மின்வாரிய பணியாளர்கள் எந்த நேரத்திலும் அங்கு சென்று பழுதை சரிசெய்ய வேண்டியிருக்கும். ஆனால், மின்பகிர்மானியைச் சுற்றி மதில்சுவர் எழுப்பி, இரும்புக் கேட் அமைத்து பூட்டப்பட்டிருப்பதால், அவசர காலங்களில் பழுதுநீக்கும் பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் நீண்ட நேர மின்தடை, பொதுமக்களுக்கு சிரமம் மற்றும் அவசர காலங்களில் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் அபாயமும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.இந்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்கள் சிலர் ஒருங்கிணைந்து மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை மற்றும் காவல்துறையிடம் பலமுறை மனுக்கள் அளித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மௌனம் சாதித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து. அதிகாரிகள் மீது இருந்த நம்பிக்கை வெறுத்து கடந்த 25.02.2026 அன்று மக்கள் விடுதலைக் கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகள் நேரில் வந்து ஆக்கிரமிப்பு பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அந்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அதன்பின்னரும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால், மீண்டும் ஒரு கட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் பத்து ரூபாய் இயக்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து 2.07.2026 அன்று சாலை மறியல் போராட்டத்தை அறிவித்தனர்.இதையடுத்து 3 ஆம் தேதி அன்று அவசரமாக பேரளம் காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அதன் தொடர்ச்சியாக ஜூலை 6 ஆம் தேதி அன்று வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் இதனால் பல மாதங்களாக நீடித்து வந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் ஏற்பட்டிருந்தது.ஆனால், அந்த நம்பிக்கை மறுநாளே சிதறியது.ஜூலை 7 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை, அதிகாரிகளிடம் புகார் அளித்த ஊர் மக்களின் சிலர் திரௌபதி அம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தனர் அதில் குறிப்பாக சுகன்யா என்பவரை பார்த்து கோவில் பூசாரி முரளி ஆபாசமாக கடுமையான வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது, அதைப் பார்த்த விவசாயி ரவி என்பவரும் அங்கு இருந்த மற்றும் சிலரும், பூசாரி முரளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வார்த்தைகள் கடுமையாக முற்றிய நிலையில், பூசாரி முரளி மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென அங்கு உள்ளவர்களை தாக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பூசாரி முரளி தாக்கியதில் விவசாயி ரவி என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. அப்போது தடுக்க முயன்ற சுகன்யாவையும் தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸை வரவழைத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், பேரளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் நடத்திய கோவில் பூசாரி முரளியை தேடிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.ஒரு கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடங்கிய புகார், இன்று உயிருக்கு ஆபத்தான வன்முறைச் சம்பவமாக மாறியிருப்பது உள்ளூர் மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பல மாதங்களாக பொதுமக்கள் தொடர்ந்து மனுக்கள் அளித்தும், போராட்டங்களை அறிவித்தும், அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்ட மறுநாளே இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோவில் சொத்துகள், பொதுப்பாதை, மின்பகிர்மானி மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பான புகார்கள் மீது மாவட்ட நிர்வாகம் விரைந்து, துரிதமான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வன்முறைச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்குமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இனிமேல் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில், கோவில் சொத்துகள் மற்றும் பொதுச் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே கூத்தனூர் கிராம மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. கட்டுரை: ஊடகவியலாளர் அ.மகேஷ்
