முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தொடங்கியுள்ள வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில், அவரது வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே பந்தநல்லூரில் வீ த லீடர்ஸ் அமைப்பினர் மற்றும் திருவள்ளுவர் விவசாய சங்கத்தினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பணியை மேற்கொண்டனர்.முன்னதாக, பந்தநல்லூர் சிவன் கீழவீதியிலிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி தொடங்கியது. பதாகைகளை ஏந்தியவாறு புறப்பட்ட அமைப்பினர், பந்தநல்லூர் கடைவீதியில் உள்ள வணிக நிறுவனங்கள், மளிகைக் கடைகள், பூக்கடைகள், பழக்கடைகளில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியில் ஏந்தி வந்த பதாகைகளில் “மரம் வளர்ப்போம்… மழை பெறுவோம்”, “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்… பூமியை காப்போம்”, “சுற்றுச்சூழலை காப்பது நம் எதிர்காலத்தை காப்பது”, “இன்று ஒரு மரம்… நாளைக்கு பலருக்கு நிழல்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.தொடர்ந்து, கடைவீதி அருகே சாலையோரப் பகுதிகளில் சுற்றுச்சூழல் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பொதுமக்கள் பயன்படுத்திவிட்டு அலட்சியமாக வீசியிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள், காலி குடிநீர் கேன்கள் உள்ளிட்ட குப்பைகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை சாக்குப் பைகளில் எடுத்துச் சென்று ஊராட்சி ஒன்றிய துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.மேலும், நிகழ் மாதத்தை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதமாகக் கருதி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏரி, குளங்கள், வாய்க்கால்களை சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளிலும் வீ த லீடர்ஸ் அமைப்பினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்ச்சிக்கு செந்தில்குமார், ஹரிஹரன், தாமரைக்கண்ணன், கே.பி.கே. பாஸ்கர், ராதா, பூ. சந்திரன், மதி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். பேரணியில் பண்ணைவயல் இளங்கோவன் முன்னிலை வகித்தார். திருவள்ளுவர் விவசாய சங்கத் தலைவர் கலைமணி கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார்.மேலும், விவசாய சங்கத் தலைவர் திருவாவடுதுறை ஸ்ரீ நமச்சிவாய மூர்த்திகள், பந்தநல்லூர் மனோகர், கொளஞ்சி, மதகுசாலை ரவிச்சந்திரன், நாகனஞ்சேரி சிவானந்தன், டி. குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியையொட்டி பந்தநல்லூர் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.செய்தியாளர் அ.மகேஷ்
