கும்பகோணத்தில் மகளை டியூஷன் வகுப்பிலிருந்து அழைத்துச் செல்ல காத்திருந்த பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் கணேஷ் நகரைச் சேர்ந்த ஜி. பிரபாகர் மனைவி கே.எஸ். காமினி (36). இவரது மகள் கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். சாலையில் மணிக்காரத் தெருவில் உள்ள கே.2 அகாடமியில் டியூஷன் படித்து வருகிறார்.இந்நிலையில், புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் தனது மகளை அழைத்துச் செல்வதற்காக கே.2 அகாடமி எதிரே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்போன் பார்த்தபடி காமினி காத்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, நீல நிற இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காமினியிடமிருந்த செல்போனை கண்ணிமைக்கும் நொடியில் திடீரென பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அகடாமி மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள முக்கிய சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் மேற்கு காவல் நிலைய போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கோவில் நகரமான கும்பகோணத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி? கோவில் நகரமான கும்பகோணம் நகரில் பெண்களின் பாதுகாப்புக்காக காவல்துறையினரின் கண்காணிப்பு மற்றும் சிங்கப்பெண் அதிரடிப்படை உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இரவு நேரத்தில் பெண்ணிடம் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் இரவு நேர காவல் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதுடன், செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள கும்பகோணம் டிஎஸ்பி சர்மு இச்சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.செய்தியாளர் அ.மகேஷ்
