கும்பகோணம் டிவிஷனுக்கு உள்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக குடோன்களுக்கு கொண்டு சென்று பாதுகாக்க வேண்டும் என திருவள்ளுவர் விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் ச. கலைமணி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து தஞ்சாவூர் மண்டல முதுநிலை மேலாளருக்கு அவர் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:கும்பகோணம் டிவிஷனுக்கு உள்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஒவ்வொரு நிலையத்திலும் 10 ஆயிரத்துக்கும் மேல் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை குடோன்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக சேமிக்க வேண்டும் என வலியுறுத்தி, கும்பகோணம் டிவிஷனல் மேனேஜருக்கு கடந்த ஜூலை 9-ஆம் தேதி குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக இன்று தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு வலியுறுத்தப்பட்டுள்ளது.தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பின்றி தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் மழைநீர் மற்றும் ஈரப்பதத்தால் சேதமடையும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டைப் போல நெல் முளைத்து வீணாகிவிடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, கும்பகோணம் டிவிஷனுக்கு உள்பட்ட அனைத்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் தேக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக குடோன்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக சேமிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சாவூர் மண்டல முதுநிலை மேலாளரிடம் ச. கலைமணி கேட்டுக்கொண்டுள்ளார்.செய்தியாளர் அ.மகேஷ்
