பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கதல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி இன்று மதியம் உடன் நிறைவடைந்தது. கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதில் தனக்கு உள்ள சொத்து மதிப்பீட்டு பட்டியலையும் இணைத்துள்ளார். அண்ணாமலை பெயரில் அசையும் சொத்து 36 லட்சத்து 4100 ரூபாயும், அசையா சொத்து 1 கோடியே 12 லட்ச ரூபாயும் உள்ளது. அவரது மனைவி அகிலாவின் பெயரில் 2 கோடியே 3 லட்சத்து 12 ஆயிரத்து 77 ரூபாய் அசையும் சொத்தும், 53 லட்ச ரூபாய் அசையா சொத்தும் உள்ளது. அண்ணாமலை 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி கார் வைத்துள்ளார். அண்ணாமலை மீது 24 வழக்குகள் உள்ளன.
ஹெச்டிஎப்சி வங்கியில் 25 லட்சத்து 30 ஆயிரத்து 492 ரூபாய், கனரா வங்கியில் 2608 ரூபாய் உள்ளது. கையில் ரொக்கமாக 5 லட்ச ரூபாய் பணம் இவரிடம் உள்ளது. இவரது மனைவி அகிலாவிடம் 1 லட்சத்து 56 ஆயிரம் ரூபாயும் உள்ளது என தெரிவித்துள்ளார். 62.73 ஏக்கர் நிலம் சூடாமணி மற்றும் சின்ன தாராபுரம் பகுதியில் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை வேட்பு மனுத்தாக்கல் செய்த போது அளித்த பிரமாண பத்திரத்தில் கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


