திருவிடைமருதூர் அருகே ஆடுதுறையில் ஜேசிஐ அலுமினி கிளப் மண்டலம் 23, மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், தஞ்சாவூர், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, கும்பகோணம் கிரேட் இந்தியன் மொபைல்ஸ், திருபுவனம் லிங்கம் சில்க்ஸ், ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.ஆடுதுறை கேஜிஎஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 207 புறநோயாளிகள் கலந்து கொண்டு இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண்புரை, கண்ணீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட பல்வேறு கண் தொடர்பான பாதிப்புகள் குறித்து மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.பரிசோதனையின் அடிப்படையில் கண் அறுவைச் சிகிச்சை தேவைப்படும் 45 பேர் தேர்வு செய்யப்பட்டு, இலவச கண் அறுவைச் சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கண்புரை உள்ளிட்ட கண் பாதிப்புகள் கண்டறியப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், தேவையானவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.மேலும், முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. கண் பார்வையைப் பாதுகாக்கும் வகையில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவ்வப்போது கண் பரிசோதனை செய்து கொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.முகாமை ஏற்பாடு செய்த ஜேசிஐ அலுமினி கிளப் மண்டலம் 23 மற்றும் இணைந்து செயல்பட்ட கிரேட் இந்தியன் மொபைல்ஸ், லிங்கம் சில்க்ஸ், மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், தஞ்சாவூர், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியோருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.செய்தியாளர் அ. மகேஷ்
